நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி

கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். திரையுலகினரை இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் நடிக்க வாய்ப்பு கேட்டு செல்பவர்களை படுக்கைக்கு அழைப்பது நடைமுறையில் உள்ளதாக சில நடிகைகள் பரபரப்பாக பேட்டி அளித்து வருகின்றனர். இந்தநிலையிலும் எங்காவது ஓரிடத்தில் பாலியல் கொடுமை தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இளம் ஹீரோ, இயக்குனர் ஆகியோர் இளம் நடிகையை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய சம்பவம் ஐதராபாத்தில் நடந்திருக்கிறது.

ஹீரோ சிருஜன், இயக்குனர் சலபதி ஆகியோர் வளர்ந்து வரும் நடிகை ஒருவருக்கு தங்கள் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்றனர். பீமாவரத்திலிருந்து ஐதராபாத்திற்கு மூவரும் ஒரே காரில் சென்றனர். விஜயவாடா அருகே சென்றபோது இயக்குனரும், ஹீரோவும் நடிகையிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அதை நடிகை தடுத்தார். விடாமல் அவர்கள் தொந்தரவு தரவே சண்டை போட்டு போராடத் தொடங்கினார் நடிகை. இதில் கார் நிலைதடுமாறி லாரி மீது மோதியது. நடிகை காயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து நடிகையிடம் நலம் விசாரித்ததுடன் நடந்த சம்பவம் தொடர்பாக விஜயவாடா போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து இயக்குனரை போலீசார் கைது செய்தனர். ஹீரோ தலைமறைவாகிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நடிகை கூறும்போது,’என்னை நடிக்க அழைத்தபோது தனியாக காரில் வருவதாக கூறினேன். ஆனால் தங்களுடனே வரும்படி அழைத்தனர். அதை ஏற்று உடன் சென்றேன். காரில் சென்றபோது இருவரும் ஆபாசமாக பேசி என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டனர். எதிர்ப்பு தெரிவித்தேன்.

பிறகு காரின் பின்பக்க சீட்டில் தூக்கிபோட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். எதிர்த்து போராடினேன். இதில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. காயத்துடன் நான் தப்பித்தேன். இதுபற்றி வெளியில் சொன்னால் உனக்கு வேறு பட வாய்ப்பு கிடைக்காது என்று இருவரும் மிரட்டினார்கள். ஆனாலும் இதுபற்றி புகார் செய்திருக்கிறேன். அவர்களுக்கு தகுந்த தண்டனை தரவேண்டும்’ என்றார். சம்பவத்தில் தொடர்புடைய ஹீரோ, இயக்குனர் பெயரை வெளியிட்ட போலீசார் நடிகையின் பெயரை ரகசியமாக வைத்திருக்கின்றனர்.