கேரளாவில் அரசியல் மோதல்களுக்கு பா.ஜனதாதான் காரணம்: முதல்-மந்திரி பினராயி விஜயன்

மருத்துவக்கல்லூரி ஊழலை மறைக்க கேரளாவில் பா.ஜனதா கட்சியினர் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது என்று சட்டசபையில் பினராயி விஜயன் கூறினார்.

கேரளாவில் சமீப காலமாக அரசியல் மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கேரள சட்டசபை இன்று கூடியது.

இதில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர். அதில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பா.ஜனதா இடையே நடைபெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் இதனை வலியுறுத்தி எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

கேரளாவில் பா.ஜனதா கட்சியினர் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்று மாநில உளவுத்துறை அறிக்கை தந்தது.

மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கு லஞ்சம் பெற்றதாக பா.ஜனதாவினர் மீது புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை திசை திருப்புவதற்காகவும், மக்கள் மத்தியில் பரவி வரும் தகவல்களை மறைப்பதற்காகவும் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட முயற்சி செய்வதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து மாநில அரசும் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவதில் லஞ்சம் வாங்கியது தொடர்பான புகாரில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கும் மாநில அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.