சந்திரபாபு நாயுடுவை சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற ஜெகன்மோகன் மீது சட்ட நடவடிக்கை : ஆந்திர அரசு தீவிர ஆலோசனை

இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது. ஆந்திராவில் உள்ள நந்தியால் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. அங்கு சில நாட்களுக்கு முன் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி,  சந்திரபாபு நாயுடு போன்ற இரட்டை வேடம் போடும் நபரை பொது இடத்தில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றார்.

இது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன்மோகன் பேச்சுக்கு தெலுக்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆந்திர அரசு ஆலோசித்து வருகிறது. ஜெகன்மோகன் பேச்சு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கர்நுால் நகர காவல்துறை ஆணையருக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் சுப்பாராவ் ஜெகன்மோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.