கிணற்றுடன் 18 சென்ட் நிலம் கொடுத்த ஓ.பி.எஸ்: லட்சுமிபுரம் மக்கள் மகிழ்ச்சி - போராட்டம் வாபஸ்

நீண்ட நாட்களாக நீடித்து வந்த தேனி லட்சுமிபுரம் மக்களின் கிணறு பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. கிணற்றுடன் 18 சென்ட் நிலத்தையும் ஓ.பி.எஸ் தரப்பினர் ஒப்படைத்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் புதிதாக ராட்சத கிணறு அமைக்கப்பட்டதால் தங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிகப்பட்டுவதாக லட்சுமிபுரம் புகார் தெரிவித்தனர்.

இதற்காக லட்சுமி புரம் மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஒபிஎஸ் தரப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் கிணற்றை ஒப்படைப்பதாக கூறி மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், லட்சுமிபுரத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு சொந்தமான கிணற்றுப் பிரச்சனையில் சமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. லட்சுமிபுரம் குடிநீர் பிரச்சனைக்கு காரணமான கிணறு மற்றும் 18 சென்ட் நிலத்தை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கிராம கமிட்டியிடம் ஓ.பி.எஸ் தரப்பினர் கையெழுத்திட்டனர்.

கிணறு ஒப்படைக்க ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து லட்சுமிபுரம் மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். மேலும், போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மகிழ்ச்சி தெரிவித்தனர்.