புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?: நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த கிரண்பேடி

புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்பது குறித்து மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு நேரத்தில் நகரத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.

புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். கவர்னர் கிரண்பேடி ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்தவர் என்பதால் புதுவை காவல்துறைக்கு பல்வேறு அறிவுரைகளையும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் புதுவையில் இரவில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை அறிய கவர்னர் கிரண்பேடி தானே நேரில் களம் இறங்கினார்.

நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் கவர்னர் மாளிகையை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருடன் கவர்னர் கிரண்பேடி தலையில் முக்காடு அணிந்து ஸ்கூட்டரில் புதுவையில் நகர்வலம் வந்தார்.

புதுவையின் பிரதான சாலைகளிலும், சிறிய சாலைகளிலும் ஸ்கூட்டரில் சென்று சுற்றி பார்த்தார். சுமார் ஒரு மணி நேரம் நகரத்தை சுற்றி பார்த்த அவர், பின்னர் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

இது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவையில் பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு உள்ளது. பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கிறது. இருப்பினும் போலீசார் கூடுதலாக ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும், உத்தரவுகளையும் வழங்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.