தினகரன் அணிக்கு ஒரு போதும் நான் செல்ல மாட்டேன்: செம்மலை எம்.எல்.ஏ.பேட்டி

தினகரன் அணிக்கு ஒரு போதும் நான் செல்ல மாட்டேன், அமைச்சர் பதவி கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என செம்மலை எம்.எல்.ஏ. பேட்டியில் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் நேற்று இணைந்தனர். இதில் ஓ.பி.எஸ். அணி மூத்த நிர்வாகி செம்மலை எம்.எல்.ஏ.க்கு பதவி வழங்காததால் அவர் விரக்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இது குறித்து மாலைமலர் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு-

கேள்வி:- உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தொண்டர்களும், பொது மக்களும் எதிர்பார்த்த நிலையில் பதவி ஏதும் வழங்காததால் நீங்கள் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்:-பதவி கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் நல்ல நிலைக்கு வந்ததால் என்னை சுற்றியுள்ள தொண்டர்களும், பொது மக்களும் நமக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைப்பது இயற்கை தானே.

கே:- இணைப்பின் போது உங்களுக்கு அமைச்சர் பதவி அல்லது கட்சியில் முக்கிய பதவி வழங்காததால் தினகரன் அணிக்கு செல்வதாக கூறப்படுகிறதே?

ப:- ஒ.பன்னீர்செல்வம் சிறந்த தலைவர், அவரை நம்பி அவருக்கு பின்னால் வந்தேன். அவரது நம்பிக்கையை காப்பாற்று வேன். அவரது புகழுக்கு ஒரு போதும் களங்கம் ஏற்படுத்த மாட்டேன். தினகரன் அணிக்கு செல்வது குறித்து நான் ஒரு போதும் நினைத்தது கிடையாது.

கே:- உங்களுக்கு கட்சி பதவியோ, அல்லது அமைச்சர் பதவியோ? கொடுத்தால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படுவீர்கள் என்ற எண்ணத்தில் தான் பதவி வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறதே?

ப:- பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நான் ஒரு போதும் யாருக்கும் எதிராக பிரச்சினை செய்ய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.