சுற்றுலா செல்வது போல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் மம்தா - பா.ஜ.க. விமர்சனம்

வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை மம்தா பானர்ஜி சுற்றுலா செல்வது போன்று பார்வையிட்டார் என மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் 152 பேர் மரணமடைந்தனர். மேலும் 1.5 கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். வெள்ளத்தால் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை சென்ற வாரம் நேரில் சென்று பார்வையிட்டார். அவர் வெள்ள நீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மாநிலத்திற்கு நிவாரண நிதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மம்தா வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதை பற்றி பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

மம்தா சுற்றுலா செல்வது போன்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். அவர் நேரில் சென்று ஆறுதல் கூறினால் மட்டும் போதாது. அவர்களுக்கான நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று தர வேண்டும் என அவர் கூறினார்.

நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்ட போது மம்தா குறைந்த நேரம் மட்டுமே இருந்தார். எங்களின் குறைகளை கேட்க கூட அவருக்கு நேரமில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.