நடிப்பில் தீவிரம் காட்டும் செந்தில்: அடுத்த படத்தில் ஒப்பந்தமானார்

நீண்ட இடைவேளைக்கு பிறகு காமெடி நடிகர் செந்தில் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து செந்தில் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

1990-களில் தனது காமெடியால் தமிழ் சினிமாவை கலக்கி முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் செந்தில். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக `பிஸ்தா' என்ற புதிய படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக 'மெட்ரோ' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் சிரிஷ் நடிக்கிறார். 'அயல் ஜனல்லா' என்ற மலையாள படத்தில் நடித்து புகழ் பெற்ற ம்ரிதுல்லா முரளி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

'சைத்தான்' படத்தில் நடித்த அருந்ததி நாயர் மற்றோரு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இது காமெடி கதை என்பதால் துணை நடிகர்களுக்கு முக்கியத்துவமுள்ளது. அதன்படி படத்தில் சதிஷ், யோகி பாபு மற்றும் சென்ராயன் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ள இப்படம் கிராமப் பின்னணியில் காமெடி படமாக உருவாக உள்ள இந்த படத்தை 'மெட்ரோ' படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தரன் இசையமைக்கிறார். இது தரனின் 25வது படமாகும்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.