முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் 19 எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதத்தின் முழு விவரம்

ஜெயலலிதாவின் கனவையும், லட்சியத்தையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து வருவதால் அவருக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் தெரிவித்துள்ளனர்.

கவர்னர் வித்யாசாகர் ராவை இன்று டி.டி. வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் நான் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டேன். தங்களுக்கு இன்று இந்த மேலான கடிதத்தை சமர்ப்பிக்கிறேன்.

கடந்த பிப்ரவரி மாதம் தங்களுக்கு அளிக்கப்பட்ட மனுவில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க நானும் மற்றும் 121 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு இருந்தோம். அதன் பிறகு சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது நாங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார். பாரபட்சமாக நடந்து கொள்கிறார். அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்துகிறார். அவர் ஆட்சியில் ஊழல் பரவி உள்ளது.

கடந்த 4 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பில் இருந்தும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் ஊழல் செய்வதாகவும், ஊழலுக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுவதால் அது எங்களது கட்சிக்கு அவப்பெயரையும், பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நான் அவருக்கு ஆதரவு அளித்தபோது முதல்-அமைச்சர் பதவியை அவர் நேர்மையாகவும், பாரபட்சமின்றி செயல்படுவார் என்று நம்பிதான் ஆதரவு அளித்தேன். ஆனால் தற்போதைய சூழ்நிலை அப்படி இல்லை.

இந்த மாத தொடக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும்போது, “தற்போதைய ஆட்சியில் ஊழல் முழுமையாக நடந்து வருகிறது” என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைத்தான் அவர் இப்படி விமர்சித்து இருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் இப்படி பேட்டியளித்த 2 வாரங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொண்டு அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவியையும் வழங்கி உள்ளார். இது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரபட்சமாக செயல்படுவதையும், அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும் காட்டுகிறது.

இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டார். எங்களுக்கும் அவர் மீதான நம்பிக்கை போய் விட்டது. எனவே அவருக்கு அளித்து வரும் ஆதரவை நான் இந்த கடிதம் மூலம் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தவறு நடப்பதை சுட்டிக்காட்டவே இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் இதை நான் செய்துள்ளேன்.

எம்.எல்.ஏ.வுக்கு உள்ள இத்தகைய உரிமை பற்றி ஏற்கனவே 13.5.2011 அன்று எடியூரப்பா-பாலச்சந்திரா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே எம்.எல்.ஏ. என்ற முறையில் அந்த அடிப்படை உரிமையில் இந்த தகவலை நான் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

முதல்-அமைச்சர் என்பவர் பாரபட்சமின்றி மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் எங்கள் கட்சி தலைவி ஜெயலலிதாவின் கனவும், லட்சியமும் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இனி நான் ஆதரவு அளிக்க முடியாது. எனவே தாங்கள் இந்த வி‌ஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தினகரனின் 19 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.