`விவேகம்' காட்சிகள்: டிக்கெட் வாங்க திரையரங்குகளில் முந்தியடிக்கும் அஜித் ரசிகர்கள்

விவேகம் முதல் காட்சியை பார்ப்பதற்கான டிக்கெட்டை வாங்க அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் முந்தியடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை மறுநாள் (24/8/17) வெளியாக இருக்கும் படம் `விவேகம்'.

இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான விவேகம் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். அஜித் - காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

படம் ரிலீசாக இன்னமும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் அஜித் ரசிகர்கள் `விவேகம்' படத்தை கொண்டாடி வருகின்றனர். இணைய முன்பதிவுக்கான டிக்கெட்டுகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இதையடுத்து டிக்கெட் கிடைக்காத அஜித் ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதால், பெயர் தெரியாத திரையரங்குகளில் கூட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிவிதிப்பினால் ரசிகர்கள் திண்டாடி வரும் நிலையில், ஒரு சில திரையரங்குகளில் கட்டண கொள்ளையும் நடப்பதாக கூறப்படுகிறது. எனினும் அஜித் படத்தை முதல் நாளே பார்த்தே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.