உயிருக்கு போராடிய நாய்: காப்பாற்ற முயன்ற 2 இளம்பெண்கள் பலி

சுவிட்சர்லாந்து நாட்டில் உயிருக்கு போராடிய நாயை காப்பாற்ற முயன்றபோது 2 இளம்பெண்கள் பலியானது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள La Neuveville என்ற துறைமுக நகரில் இரண்டு இளம்பெண்கள் வசித்து வந்துள்ளனர்.

கடந்த மே மாதம் 15-ம் திகதி Bienne ஏரி வழியாக இருவரும் நடந்து சென்றபோது, அவர்களது வளர்ப்பு பிராணியான நாய் ஒன்று ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளது.

இக்காட்சியை கண்ட இருவரும் உடனடியாக ஏரியில் குதித்து நாயை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால், ஏரியில் உயிருக்கு போராடிய நாய் உள்பட இரண்டு பெண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் விசாரணையை தொடங்கியபோது, ஏரிக்கு அருகில் இருந்த மின்கம்பி ஒன்று அறுந்து ஏரியில் விழுந்துள்ளது.

பழுதான மின்கம்பி வழியாக பாய்ந்த மின்சாரம் நாய் உள்பட இருவரின் உயிரையும் பறித்துள்ளது தெரியவந்துள்ளது.

இவ்விவகாரம் La Neuveville மின்சார நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்போது பணியில் இருந்த அதிகாரி ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பெண்கள் மற்றும் நாய் பலியானது தொடர்பாக சட்டப்பூர்வமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக La Neuveville கவுன்சில் அதிகாரிகள் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனையின் முடிவில், விபத்து தொடர்பாக அதிகாரப்பூர்வமான விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதாக கவுன்சில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.