எடப்பாடி அரசு பலம் 111 ஆக குறைந்தது: எம்.எல்.ஏ.க்களை இழுக்க மீண்டும் குதிரை பேரம்?

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் பலம் 111 ஆக குறைந்துள்ளதையடுத்து, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் பலம் 111 ஆக குறைந்துள்ளதையடுத்து, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக கை கோர்த்துள்ளனர்.

6 மாதங்களாக எலியும், பூனையுமாக இருந்த இரு அணி தலைவர்களும் தங்களுக்குள் நீடித்து வந்த மோதலுக்கு நேற்றோடு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் காட்சிகள் மாறியுள்ளது.

தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட அ.தி.மு.க. தலைமை கழகம் மீண்டும் களை கட்டியுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்-அமைச்சராக உடனடியாக பொறுபேற்றுக் கொண்டார். அவரது ஆதரவாளரான மா.பா.பாண்டியராஜனும் அமைச்சரானார்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்கி, கட்சியை ஒருங்கிணைத்து வழி நடத்தும் பொறுப்பையும் கொடுத்திருப்பது தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான 19 பேர் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

11 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்துள்ள ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து இப்போது பொறுப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் இன்று கவர்னரை சந்தித்து பேசினார்கள். இது அரசியல் களத்தில் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் தனி அணியாக திரண்டிருப்பது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தற்போதைய சூழலில் தினகரன் பக்கம் 22 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலம் 122-ல் இருந்து 100 ஆக குறைந்துள்ளது.

இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடிக்கு கை கொடுத்துள்ளனர். இதனால் எடப்பாடியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 111 ஆக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்தே இப்போது எடப்பாடியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 111 ஆக மட்டுமே இருக்கிறது.

இப்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் மேலும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அது நிச்சயம் அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும்.

இதனால் தினகரன் அணியினர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கவும் , எடப்பாடி அணியில் இருந்து மேலும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கும் அவர்கள் முயற்சிக்கலாம்.

அது போன்ற ஒரு நிலை நிச்சயம் குதிரை பேரத்துக்கே வழிவகுக்கும் என்றே கூறப்படுகிறது. இரு அணிகளும் இணைந்து புதிய அமைச்சரவையையும் உருவாக்கி இருக்கும் நிலையில், தினகரனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகிய போது புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அப்போதும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சட்டசபையில் கட்சிகளின் பலம்:

எடப்பாடி அணி - 111 (எடப்பாடி - 100, ஓ.பி.எஸ். 11)  
தினகரன் அணி - 22 (தினகரன் - 19, அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் - 3)  
தி.மு.க. கூட்டணி - 98 (தி.மு.க. - 89, காங்கிரஸ் - 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1)