இந்த ஆண்டு உணவு தானியம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை இதுவரை வட மாநிலங்களில் சராசரியை விட அதிக அளவு பெய்துள்ளதால் இந்த ஆண்டு உணவு தானியத்தின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று விவசாயத்துறை கணக்கிட்டுள்ளது.

நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கம். குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் இந்த கால கட்டத்தில் அதிக மழை பெய்யும்.

இந்த ஆண்டு ஓரளவு சிறப்பாக மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல தென்மேற்கு பருவமழை நன்றாக இருந்தது. இப்போதும் அதேபோல மழை பெய்திருப்பதால் விவசாயிகள் அனைத்து இடங்களிலும் உற்சாகமாக விவசாயம் செய்துள்ளனர்.

இந்த கால கட்டத்தில் நடைபெறும் விவசாயத்தை காரிப்பருவம் என்று அழைக்கின்றனர். கடந்த ஆண்டு காரிப் பருவத்தை விட இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 855.85 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு விவசாயம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 878.23 லட்சம் ஹெக்டேர் நிலபரப்பில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய விவசாய பொருள்கள் கடந்த ஆண்டு 266 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 285 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிரிடப்பட்டுள்ளது.

பருப்பு தானியங்கள் கடந்த ஆண்டு 116.95 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு 121.28 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.

பருத்தி விவசாயம் கடந்த ஆண்டு 96.40 லட்சம் ஹெக்டேரில் நடந்தது. இந்த ஆண்டு 114.34 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

எண்ணெய் வித்துக்கள் விவசாயம் மட்டும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 165.49 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இந்த ஆண்டு 148.88 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

கரும்பு விவசாயம் கடந்த ஆண்டு 46.64 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இந்த ஆண்டு 49.71 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு காரிப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி 13 கோடியே 80 லட்சம் டன்னாக இருந்தது. இந்த ஆண்டு அதிக அளவில் விவசாயம் நடப்பதால் உணவு தானியத்தின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று விவசாயத்துறை கணக்கிட்டுள்ளது.

கடந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக நடந்ததால் பல்வேறு உணவு பொருட்கள் விலை குறைந்துள்ளது. 190 ரூபாய் வரை இருந்த துவரம் பருப்பின் விலை 92 ரூபாயாக உள்ளது. 180 ரூபாய் வரை இருந்த கொண்டை கடலை 105 ரூபாயாக உள்ளது. 200 ரூபாய் வரை விற்கப்பட்ட உளுந்து விலை 130 ரூபாயாக உள்ளது.

தென்மேற்கு பருவமழை இதுவரை ராஜஸ்தான், குஜராத், மிசோரம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சராசரியை விட அதிக அளவு பெய்துள்ளது. கேரளா, கர்நாடகா, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலந்து ஆகிய மாநிலங்களில் சராசரியை விட சற்று குறைவாக பெய்துள்ளது.

காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், குஜராத், மேற்கு மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, நாகாலந்து, மிசோரம், திரிபுரா மாநிலங்களில் சராசரி அளவுக்கு மழை பெய்திருக்கிறது.